டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பேரிடர் சமயங்களில் மாநில அரசுகள் இடையே பாகுபாடு பார்ப்பதில்லை. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது, தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை. மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூபாய் 900 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. தென் மாவட்டங்களில் மழை வருவதற்கு முன்னதாகவே பேரிடர் நிதியின் இரண்டாவது தவணை தொகையை மத்திய அரசு கொடுத்து விட்டது.

அதிகன மழை குறித்து 12ஆம் தேதியே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் முன்னதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துக் கொண்டே தான் இருந்தது. கனமழை பெய்யும் என எச்சரித்த பின்னர் மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன? சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு வருகிறது.

வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு வழங்கிய 4000 கோடி என்னவானது? ரூபாய் 4000 கோடியில் 92 சதவீதம் செலவழித்து விட்டோம் என கூறிய அமைச்சர் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது மாற்றி பேசியது ஏன்? சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது ரூபாய் 4000 கோடியில் 42% மட்டுமே பயன்படுத்தியுள்ளோம் என மாற்றி பேசியது ஏன்? மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போது முதலமைச்சர் எங்கே இருந்தார்? வரலாறு காணாத மழையால் மக்கள் பாதிக்கப்பட்ட போது முதலமைச்சர் இந்தியா கூட்டணி கட்சியினருடன் இருந்தார்.

வெள்ள பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட மக்களுடன் இல்லாமல் டெல்லியில் இருந்த முதல்வர் மத்திய அரசை குறை கூறுவதா? அதி கனமழையை தேசிய பேரிடர் என அறிவிக்க இயலாது. வேறு எந்த மாநிலத்தில் நடந்த நிகழ்வையும் இதுவரை தேசிய பேரிடர் என மத்திய அரசு அறிவிக்கவில்லை. உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட போதும் கூட தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை. மாநில பேரிடராக அறிவிக்க விரும்பினால் அதற்கான வழிமுறைகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில பெயரிடராக அறிவிக்க நினைத்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும். இந்தியாவில் இதற்கு முன்பு தேசிய பேரிடர் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதில்லை.

தமிழக முதல்வர் டெல்லி வருவதற்கு முன்பே தேசிய பேரிடர் மீட்பு குழு தென் மாவட்டங்களுக்கு சென்றது. 2015ல் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின் தமிழக அரசு என்ன பாடத்தை கற்றுக் கொண்டது? ரூபாய் 6000 நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தாதது ஏன்? நிவாரண நிதி ரூபாய் 6 ஆயிரத்தை வங்கி கணக்கு மூலம் அளிக்கலாமே, ஏன் ரொக்கமாக வழங்குகிறீர்கள்? என கேள்வியெழுப்பினார்..