முஸ்லிம் மதத்திற்கு மாறும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிட மக்களை முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்து ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டு வரை பிற மதங்களில் இருந்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறினால் அவர்கள் ஏற்கனவே பெற்ற ஜாதி சான்றிதழ் மாற்றப்பட்டு முஸ்லிம் ராவுத்தர் அல்லது லப்பை என்று புதிய ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆனால் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு மதம் வாரிய முஸ்லிம்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் தமிழக அரசு நேற்று இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2008 ஜூலை 29ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள, ஏழு முஸ்லிம் பிரிவுகளில் மதம் மாறுவோர் விரும்பும் ஒரு பிரிவை குறிப்பிட்டு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் என ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.