தர்மபுரியில் பாஜக கட்சி சார்பில் ஒகேனக்கல் காவிரி உபரிநீரை மாவட்ட நீர் நிலைகளில் நிரப்பும் திட்டத்தை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 20 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் இந்திய அளவில் வேலை பார்த்து வருவதற்கு காரணம் திராவிட கட்சிகள் மட்டுமே. தர்மபுரியில் ஜாதி அரசியல் செய்து பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள். கொள்கை இல்லாத திமுகவுடன் எப்போதும் பாஜகவின் பயணம் இருக்காது.

பாஜகவை கிண்டல் செய்யும் திமுக தங்களுடன் இருக்கும் ஸ்டெப்னிகளை கழட்டி விட்டு விட்டு 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை எதிர்த்து தனியாக போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால் 40-ம் எங்களுக்குத்தான் என்று சொல்லும் திமுகவுக்கு வெறும் பூஜ்யம் மட்டுமே கிடைக்கும். செங்கல் அரசியல் செய்கிறார் இளவரசர் உதயநிதி. அவருடைய அப்பா மற்றும் தாத்தா காலத்தில் தர்மபுரி மாவட்டத்திற்கு அறிவித்த சிப்காட் தொழிற்பேட்டையின் செங்கலை அவர் கட்டுவாரா.? பாஜகவை பார்த்து முதல்வருக்கு குளிர் மற்றும் ஜுரம் வரத் தொடங்கி விட்டது.

திமுக அமைச்சர்கள் ஒருவரை கூட விடமாட்டேன். யாரும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது. அவர்கள் செய்த ஒவ்வொரு ஊழலுக்கும் நான் கணக்கு கேட்பேன். தமிழகத்திலிருந்து பாஜக கட்சியின் சார்பில் எம்பிக்களை தேர்வு செய்து அனுப்பினால் மட்டும் தான் தர்மபுரி மாவட்டம் உட்பட மாநிலம் முழுவதும் வளர்ச்சி ஏற்படும். அதன் பிறகு திமுக அரசு விளம்பரங்களுக்காக நேரத்தை விரயம் செய்யாமல் கிடப்பில் போட்டிருக்கும் திட்டங்களை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.