மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பயங்கரமாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனமாக இருக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஆனது நெல்லை, தூத்துக்குடி வரலாறு காணாத அளவுக்கு கனமழை புரட்டி போட்டு விட்டது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்ததால் வெள்ளம் ஊர்களுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானவர்களின் வீடுகள் அடித்து செல்லப்பட்டது.

இதில் பலரும் உயிரிழந்தார்கள். இந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் தற்பொழுது கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஏற்பட்ட வெள்ளம் அதற்கு கீழே இருக்கும் அணைகளை வேகமாக நிரப்பி வருகிறது. இதனால் அவற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது . இந்த நிலையில் விடாது பெய்யும் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்புவதை தவிர்ப்பதற்காக தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக தண்ணீரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள். இதனை அடுத்து தாமிரபரணி கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.