திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்பு பாளையம் பகுதியில் முனுசாமி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும், திலகவதி, திவ்யா என்ற இரு மகள்களும், பரத் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் முனுசாமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மைசூருக்கு சென்றபோது அங்கு அவரை ஒரு நாய் கடித்ததோடு கால்களால் பிரண்டியுள்ளது. இதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில் கடந்த வாரம் அவருடைய வீட்டில் வளர்த்து வந்த அவருடைய வளர்ப்பு நாயும் அவரை கடித்துள்ளது.

இதனையடுத்து  அந்த நாய் இறந்துவிட்ட நிலையில், மூச்சு இரைச்சல் மற்றும் அதிக தண்ணீர் தாகம் போன்ற பிரச்சினைகளால் முனுசாமி பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் வெறிநாய் தொற்று இருப்பது தெரியவந்தது. அவர் தன்னை 2 முறை நாய் கடித்ததாக மருத்துவர்களிடம் கூறிய நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நாய் கடித்ததை தொழிலாளி பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் கடைசியில் உயிரே போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.