திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லலக்குண்டுவில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாற்றித்திறனாளி. இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகளும், 4 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்த குழந்தைகளை சரியாக பராமரிக்காமல் துன்புறுத்துவதாக அம்மைநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர்கள் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவகுமார், சமூக நலத்துறை அலுவலர் புஷ்பகலா, நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி மற்றும் போலீசார் நாகராஜின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்தனர். அப்போது நாகராஜிடம் அதிகாரிகள் பல மணி நேரம் பேசி அறிவுரை வழங்கியுள்ளனர். அதனை பொருட்படுத்தாமல் நாகராஜ் அலுவலர்களை அவதூறான வார்த்தைகளால் பேசினார்.

மேலும் அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து நாகராஜ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கதவை பூட்டி கொண்டு அவர்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி வெளியே வந்து அதிகாரிகளை மிரட்டியுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர். பின்னர் தேவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.