நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரின் போது நேற்று ஒரு கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்க்கார் கல்வித் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து கூறினார். அவர் கூறியதாவது, மத்திய உயர் கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் போன்றவைகளில் 58,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத காலி பணியிடங்கள் இருக்கிறது. இதில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 12,099 ஆசிரியர் பணியிடங்களும், 1312 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளது. அதன் பிறகு உயர் கல்வி நிறுவனங்களில் மத்திய பல்கலைக்கழகங்களில் 6,180 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதன் பிறகு 15,798 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் 1,050 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளது. ஐஐடி-களில் 4,423 ஆசிரியர் பணி இடங்களும், 5,052 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் கங்கை நீர் சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து ரூ. 13,709 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கங்கை நீரை சுத்தப்படுத்துவது குடிப்பதற்காக அல்ல. பிற இடங்களில் குளிப்பதற்கு பயன்படுத்துவதற்காக என்று கூறினார்.