நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கூடாது என அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் நிர்பந்தித்துள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி மீது அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பு என அதிகாரிகள் வாக்குமூலம் அளித்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. விசாரணையின் போது நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்த வாக்குமூலத்தை குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆட்சேபனை மனு அளித்துள்ளது

மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வாதங்கள் முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளை எதிர்த்து ஆட்சேபனை மனுவில் அமலாக்கத்துறை தரப்பில் உதவி இயக்குனர் தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்ட விரோதமாக மிகப்பெரிய அளவில் மணல் அள்ளப்படுவதை தாங்கள் விசாரணைக்கு அழைத்த தமிழக அரசு அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

நீர்வளத் துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும், அது தங்கள் தவறுதான் என்றும் அதிகாரிகள் ஒத்துக் கொண்டுள்ளனர் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலதிகாரிகள் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்படுத்துவது தவர, அந்த அதிகாரிகளுக்கு வேறு வழியில்லை என்பதால் தவறிழைத்திருக்கிறார்கள் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தவறு  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக விசாரணைக்கு ஆஜரான நீர்வளத்துறை அதிகாரியில்  ஒருவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி என்பவர் நிரூபணம் செய்திருக்கிறார். அதை மீறி நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வேன் என்று அவர் ஆஜரானதாகவும், அவர் உள்ளிட்ட மற்ற அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அவர்களின் பெயரை வெளியிட விரும்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக அரசு மற்றும் மணல் மாஃபியாவிடமிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்குடன் பெயர்கள் வெளியிடப்படவில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என அதிகாரிகள் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் கிடைக்கும் ஆவணங்களை பொறுத்து மேலும் விளக்கங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் 3,900 கோடிக்கு மேற்பட்ட அளவில் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது அரசின் கணக்கீடுகளில் பார்க்கும்போது குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது 36 கோடியே 45 இலட்சம் ரூபாய்க்கு மட்டும் தான் மணல் விற்கப்பட்டுள்ளதாக அரசு ஆவணங்களில் கணக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் அசல் மதிப்பு என்பது 4,730 கோடியாக இருக்கிறது என்றும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு சட்ட விரோதமாக மணல் விற்பனை நடைபெற்றுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4 லட்சத்து 5 ஆயிரம் யூனிட் மணல் எடுக்கலாம் என  அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 27 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மணல், கனிம வளங்கள், சுரங்கங்கள் தொடர்பான மனுக்களை விசாரிக்கவில்லை என்றாலும், குறிப்பாக இந்த கூட்டு சதி பண மோசடி தொடர்பாகவும், பண பரிமாற்றம் எவ்வாறு முறைகளாக நடைபெற்றது என அமலாக்கத்துறை விசாரிப்பதால் இந்த விசாரணையில் தமிழக அரசு தலையிட முடியாது என்றும், விசாரணை ரத்து செய்ய வேண்டும் என அரசு கோரமுடியாது என்றும் ஆட்சேபனை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களின் அடிப்படையில் தமிழக அரசின் மனுவை முழுமையாக அதிகபட்ச அபாரதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது.