சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மஞ்சள் ஜெர்சி அணிந்து கொண்டு ரசிகர்கள் பட்டாளம் கடல் போல் காணப்படும். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் மற்ற அணிகள் வெல்வது கடினம். சேப்பாக்கம் மைதானத்தை சிஎஸ்கே அணியின் கோட்டை என்று கூட சொல்லலாம்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய எம்சிஜி மைதானத்தின் ரசிகர்களால் கூட சேப்பாக்கம் மைதானத்தின் ரசிகர்கள் முன் தாக்குப் பிடிக்க முடியாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது மஞ்சள் ஜெர்சி அணிந்த ரசிகர்களுக்கு நடுவே ஒருவர் மட்டும் நீல நிற ஜெர்சி அணிந்திருந்தார். சிஎஸ்கே ரசிகர்களுக்கு மத்தியில் நீல நிற ஜெர்சி அணிந்து இருந்த லக்னோ ரசிகரின் செயல் தற்போது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதாவது லக்னோ அணி வெற்றி பெற்ற போது லக்னோ ரசிகர் தனி ஒருவராய் எழுந்து நின்று நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரை அருகில் இருந்து சிஎஸ்கே ரசிகர் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது கேமரா மேன் அவரின் செயலை படம்பிடித்து  காட்டினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.