வங்கதேச இன்னிங்ஸின் போது சக வீரர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் எடுத்துச் சென்ற விராட் கோலி, கரடி பாணியில் ஓடிய வீடியோ ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விராட் கோலி ஒரு போட்டியின் ஒரு பகுதியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர் மீதுதான் அனைவரது பார்வையும் உள்ளது. இந்த நட்சத்திர வீரருக்கு ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக எப்படி மாறுவது என்பது நன்றாகவே தெரியும். இன்று பங்களாதேஷுக்கு எதிரான சூப்பர் ஃபோர் தொடரின் கடைசிப் போட்டியில் ஓய்வில் இருந்தபோதும், கோலி வாட்டர் பாய் ஆனதன் மூலம் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மைதானத்தில் எப்போதுமே தனது விதவிதமான நகைச்சுவையான கோமாளித்தனங்களால் ரசிகர்களை மகிழ்விக்கும் இந்த நட்சத்திர பேட்ஸ்மேன், நகைச்சுவையாக எந்த வாய்ப்பையும் விடுவதில்லை. பங்களாதேஷ் இன்னிங்ஸின் போது சக வீரர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் எடுத்துச் சென்ற விராட் கோலி, காலை விரித்து வித்தியாசமாக கரடி பாணியில் ஓடியது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விராட் கோலி தனது பணியை மகிழ்ச்சியோடு செய்தாலும் ரசிகர்கள் சிலர், இவரை இப்படி பார்க்க கஷ்டமாக உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.



சிரிப்பு காட்டிய கோலி :

டாஸ் வென்று இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது. வெறும் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்தது. இதில் அனாமுல் ஹக் ஆட்டமிழந்த பிறகு, சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டிலுடன் களம் இறங்கிய கோலி, அவரது ஓடும் ஸ்டைல் ​​ரசிகர்களை சிரிக்க வைத்தது. கோலி முன்னால் ஓட, முகமது சிராஜ் பின்னால் வந்து கொண்டிருந்தார். பெஞ்சில் அமர்ந்திருந்த குல்தீப் யாதவும் தனது முன்னாள் கேப்டனின் குறும்புத்தனமான பாணியால் ஈர்க்கப்பட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா 5 மாற்றங்களுடன் களமிறங்கியது :

ஆசியக் கோப்பை சூப்பர்-4 கட்டத்தில் இன்று நடைபெறும் கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு சென்றுள்ள இந்திய அணி, இந்தப் போட்டியில் 5 மாற்றங்களைச் செய்துள்ளது. திலக் வர்மா ஒருநாள் அணியில் அறிமுகமாகிறார். அதேபோல சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விளையாடும் 11க்கு திரும்பியுள்ளனர். இதனால் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயரால் இந்தியாவுக்காக தொடர்ந்து 3வது போட்டியில் விளையாட முடியவில்லை. பிசிசிஐயின் தரப்பில், அவரது உடல்நிலை நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது, ஆனால் அவர் முழு உடல் தகுதியும் இல்லை என தெரிவித்தது. வங்கதேச அணிக்காக தன்சிம் ஷாகிப் அறிமுகமானார். வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 265 ரன்கள் எடுத்துள்ளது.

பங்களாதேஷ் அணி விளையாடும் லெவன் :

லிட்டன் தாஸ் (வி.கீ), தஞ்சீத் ஹசன் தமீம், எனமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), தௌஹீத் ஹ்ரிடே, ஷமிம் ஹொசைன், மெஹ்தி ஹசன் மிராஜ், மெஹிதி ஹசன், நசும் அகமது, தன்சிம் ஹசன் ஷாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான்.

இந்தியாவின் ஆடும் லெவன் :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா.