தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொங்கல் பரிசு தொகப்பு மற்றும் மகளிர் உரிமைத்தொகை போன்ற நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு கிடைக்கின்றன. அதேசமயம் சமையல் சிலிண்டர் வழங்குவது போன்ற பல்வேறு முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. சமீபத்தில் கூட பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு ஸ்மார்ட் போன் மூலமாக பணம் செலுத்தும் வசதியை வழங்கவும் யு பி ஐ மூலமாக பணம் செலுத்தும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

இந்நிலையில் பொதுமக்களுக்கான சிறப்பு சேவைகள் வழங்கும் திட்டத்தில் தமிழக அரசு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாக உள்ள சானிடரி நாப்கின்களை ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அதன்படி முதல் கட்டமாக கரூரில் உள்ள 21 ரேஷன் கடைகளில் நாப்கின் பாக்கெட்டுகள் விற்பனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தோழி சுகாதார நாப்கின்கள் விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் குறைந்த விலைக்கு இது வழங்கப்படுகிறது. இது விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது.