பொதுவாக நாம் வெளியில் செல்லும்போது பூனையை பார்த்தால் அல்லது பூனை குறுக்கே சென்றால் இந்து சாஸ்திரத்தின் படி அது துரதிஷ்டம் என்று கூறுவார்கள். நாம் செல்லும் பாதையில் பூனை குறுக்கே வந்தால் அது அபசகுணமாக கருதப்படுகின்றது. இப்படி ஒரு நம்பிக்கை இருந்து வருவதால் பலரும் பூனையை கண்டால் சிறிது நேரம் நின்று தண்ணீர் குடித்துவிட்டு அதன் பிறகு செல்வார்கள். இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். முன்னோர்கள் இவ்வாறு கூறியதற்கு பின்னால் உண்மையில் என்ன காரணம் உள்ளது என்று யோசித்துப் பாருங்கள். பழங்காலங்களில் மக்கள் காடு வழியாக பயணம் செய்ய வேண்டிய தேவை இருந்தது.

ஆனால் இன்றைய காலத்தில் காணப்படுவதைப் போல அப்போது வாகன வசதி என எதுவும் இல்லை. மாட்டுவண்டி அல்லது குதிரை வண்டி ஆகியவற்றை பயன்படுத்தினர். இரவு நேரத்தில் பூனைகள் வேட்டையாடும். அதனால் பூனைகளின் கண்கள் இரவில் ஒளிரும். குதிரைகள், காளைகள் மற்றும் பறவைகள் போன்ற விலங்குகள் இரவில் பூனையின் கண்களை கண்டு பயந்து கொள்ளும். மாட்டு வண்டியில் செல்லும்போது பூனை குறுக்கே சென்றால் மாடுகள் பூனையை பார்த்து பயந்து திசை மாறி சென்று விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால்தான் பூனை குறுக்கே சென்றால் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று முன்னோர்கள் கூறினர். அதுவே தற்போது வரை பூனை குறுக்கே சென்றால் துரதிஷ்டம் என்று கருதப்படுகிறது.