சென்னை சேப்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை புதிய ஓய்வூதிய முறை ஒழிப்பு இயக்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட திருமாவளவன் கூறியதாவது, தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்படும். மேலும் பழைய ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் கூடுதல் செலவு ஆகாது என்பதை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தினர் சந்தித்து விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பா.ம.க செய்தி தொடர்பாளர் கே.பாலு கூறியதாவது, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு உடனடியாக பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் ம.தி.மு.க மாநில தொழிலாளர் முன்னணி தலைவர் ஆவடி அந்தரி தாஸ், தே.மு.தி.க தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைத்தலைவர் மு.வீரபாண்டியன், ஆம் ஆத்மி மாநில பொதுச் செயலாளர் ஜோசப், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கங்காதரன் போன்றோர்  உரையாற்றியுள்ளனர். மேலும் மாநாட்டில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வகுமார் தலைமை வகித்து பேசியுள்ளார்.