தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது புதிய திட்டங்கள் மூலமாக மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு காலணியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல் முறையாக மைக்ரோசாப்ட் மற்றும் பிளிங்க் அறக்கட்டளை சார்பாக கற்றல் குறைபாடுகள் சிறப்பு பயிற்சி மற்றும் ஆங்கில மொழி மேம்பாடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே முதல் முறையாக இப்படி ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சாவூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில் தினமும் ஒரு மணி நேரம் பள்ளியில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனவும் இதில் இணைய வழியில் வெளிநாட்டு பாடங்களுக்கு இணையான பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.