தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பொது நூலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக ஏராளமான மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும் நூலகம் மற்றும் சென்னை மாநகர பொது நூலகம் போன்றவற்றின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. நேற்று  அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2004 ஆம் ஆண்டு மாநில நூலக குழு அமைக்கப்பட்டது.

அதன் பின் இந்த குழு மாற்றியமைக்கப்படவில்லை. இதே போல் சென்னை மாவட்ட நூலக நிர்வாக குழுவில் 2011 க்கு பின் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதனையடுத்து தற்போது மாநில நூலகங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக அனுபவமிக்க 15 அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கவிஞர், எழுத்தாளர் உள்ளிட்ட 11 உறுப்பினர்களைக் கொண்டு சென்னை மாநகர நூலக ஆணையக் குழுவையும் தமிழக அரசு அமைத்து அதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.