கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல முன்னணி மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் சுனில் உட்பட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கு விசாரணையை சென்ற ஜனவரி 31 ஆம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் தொடர் விசாரணையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதால் மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனிடையே நடிகை மஞ்சுவாரியர் உட்பட சில சாட்சிகளிடம் மீண்டுமாக விசாரணை மேற்கொள்ள அனுமதிக்ககூடாது என சொல்லி திலீப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முக்கியமான விபரங்கள் கிடைத்து இருப்பதால் அதுகுறித்து நடிகை மஞ்சுவாரியர் உள்பட 4 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தவேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திலீபின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தாக்கல் செய்த விளக்கத்தினை ஏற்ற உச்சநீதிமன்றமானது, நடிகை மஞ்சுவாரியர் உள்பட 4 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ள அனுமதியளித்தது. நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. மஞ்சுவாரியர் திலீபின் முன்னாள் மனைவி என்பது கவனிக்கத்தக்கது.