தோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸின் அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் வருவார் என அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்..

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) தோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து முன்னாள் வீரர் அம்பதி ராயுடு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனான மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மறுபுறம், ராயுடுவின் கூற்றுப்படி, தோனியின் விலகலுக்குப் பிறகு அணியின் கேப்டன் யார் என்ற பந்தயத்தில் தொடக்க பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் முன்னணியில் உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த பிறகு, சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி 2023க்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக இருந்ததோடு மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா பிரீமியர் லீக் (எம்பிஎல்) முதல் சீசனில் புனேரி பாப்பா அணிக்கும் ருதுராஜ் கேப்டனாக இருந்தார். ஐபிஎல் 16வது சீசனில், சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக ஆடிய கெய்க்வாட்  500 ரன்களுக்கு மேல் அடித்தார்.

இந்நிலையில் அம்பதி ராயுடு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், என்னை பொறுத்தவரை அடுத்த சீசனிலும் தோனி கேப்டனாக தொடர்வார் என நினைக்கிறன். அவர் அணியில் இருக்கும் பட்சத்தில் அவர்தான் அணியை வழிநடத்துவார். தோனிக்கு பிறகு கேப்டனாகும் வாய்ப்பு ருதுராஜுக்கு பிரகாசமாக இருக்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னை அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என நம்புகிறேன்.. தோனி அவரை மிகவும் சிறப்பான முறையில் தயார் செய்துள்ளார். இந்திய அணியும் இவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும், அவர் மூன்று வடிவங்களிலும் விளையாடும் சிறந்த வீரர் என புகழாரம் சூட்டினார்.

இதுவரை கெய்க்வாட்டின் செயல்பாடு எப்படி இருந்தது?

இந்திய அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை 1 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளார். இதில் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதே நேரத்தில், அவர் 9 டி20களில் 16.88 சராசரியில் 1 அரைசதம் இன்னிங்ஸ் உட்பட 135 ரன்கள் எடுத்துள்ளார். 2020 ஐபிஎல் சீசனில் அறிமுகமானதில் இருந்து, கெய்க்வாட் 52 போட்டிகளில் 1 சதம் மற்றும் 14 அரை சதங்கள் உட்பட 39.07 சராசரியுடன் 1797 ரன்கள் எடுத்துள்ளார்.