துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து நேற்று பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் 6.0 ரிக்டர் அளவில் மூன்றாவது நிலநடுக்கமும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 என பதிவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்பின் 5 வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  5.4 ஆக பதிவாகியுள்ளது. இரு நாடுகளிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்படுவதால் மக்கள் கட்டிடங்களுக்குள் செல்லாமல் வீதியிலேயே அச்சத்துடன் தவித்து வருகின்றனர். இதனை அடுத்து பயங்கர நிலநடுக்கத்தினால் துருக்கியிலும் சிரியாவிலும் சுமார் 5000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

துருக்கி தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றாக உள்ளது. இது தான் உலகிலேயே அதிக நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். ஏனென்றால் துருக்கி அனடோலியன் தட்டில் அமர்ந்திருப்பது தான் காரணம். இந்தநிலையில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே ஒருவர் துல்லியமாக கணித்துள்ளார். ஆம், நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான பிரான்க் ஹுகர் பீட்ஸ் என்பவர் புவியியல் ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இவர் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி தனது டவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கூறியிருப்பதாவது “மத்திய-தெற்கு துருக்கி, சிரியா, ஜோர்டான், லெபனான் போன்ற பகுதிகளில் 7.5 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கூடிய விரைவிலோ அல்லது தாமதமாகவோ வரும்” எனக் கூறியிருந்தார். ஆனால் அதனை அப்போது யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது அவருடைய பதிவு வைரலாகி வருகின்றது. இதனால் இது போன்று வெளியாகும் ஆய்வு முடிவுகளை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.