நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலாத்தலமான பொக்காராவிற்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று முன்தினம் காலை 10:33 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதில் மொத்தம் 72 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பொக்காரா விமான நிலையத்தில் அந்த விமானம் நேற்று காலை 11 மணிக்கு தரையிறங்க முயற்சி செய்தபோது சில நிமிடங்களுக்கு முன்பாக விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சேட்டி நதிக்கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதற்கிடையே கீழே விழுந்து நொறுங்கிய விமானம் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. மேலும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடல்களும் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டது. இதில் வெளியான முதற்கட்ட தகவலில் 68 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து இறந்தவர்களின் உடலை மீட்கும் பணி நடைபெற்றது. விபத்து நடைபெற்ற இடத்தில் இதுவரை மொத்தம் 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறை கூறியுள்ளது. மீதமுள்ள இரண்டு பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.