தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க வசதியாக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பயனாளிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தபால்காரதனை தொடர்பு கொண்டு இந்தியா போஸ்ட் பேமென்ட் என்ற வங்கி கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். கைபேசி எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலமாக ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய அஞ்சல் வங்கி கணக்கு தொடங்கலாம் எனவும் இதற்கு வைப்புத் தொகை எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாதாந்திர உதவித் தொகையை அஞ்சலகங்களில் டோர் ஸ்டெப் பேக்கிங் என்ற சிறப்பு சேவை மூலம் பெற்றுக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகள், பி எம் கிசான் திட்ட பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை உள்ளிட்ட அரசின் தொகைகளை பெறும் பயனாளிகளும் இந்த வங்கி கணக்கை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.