தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 30 வயதை கடந்த பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 5.1 சதவீதம் பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் உள்ள அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுப்பதற்காக 30 வயதை கடந்த அனைத்து பெண்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.

அதன்படி முதல் கட்டமாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 1004 பேருக்கு மார்பக புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் 1840 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு இது உறுதி செய்யப்படும். தேவையானவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.