தமிழக அரசு 10-ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் மொழி பாடத்தை எழுதுவதை கட்டாயமாக்கி கடந்த 2016-ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தமிழக மொழிவாரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு 2020-22 ஆம் ஆண்டு வரை தமிழ் மொழி தேர்வு எழுதுவதற்கு அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழக மொழிவாரி கூட்டமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் போன்ற மொழிகள் கட்டாயமாக இருந்த நிலையில் அவற்றை நீக்கி தமிழக அரசு தமிழ் மொழியில் தான் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால் தாய் மொழியை கற்கும் வாய்ப்பு தமிழகத்தில் உள்ள மொழி வாரி சிறுபான்மையினரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தமிழக அரசு உத்தரவிட்டு வந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தை எழுதுவதை கட்டாயமாக்குவதில் இருந்து மேலும் ஒரு வருடத்திற்கு உச்சநீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்து வருகிற ஜூலையில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.