தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் கைரேகை பதிவு வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக எந்த ஒரு பகுதியில் இருந்தும் ரேஷன் பொருட்களை மக்கள் எளிதில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் ரேஷன் கடைகளுக்கு வர முடியாத முதியோர்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொருட்களை வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்தாகும் என்று சமீபத்தில் செய்தி வெளியானது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்தாகும் என வெளியான செய்தி உண்மையல்ல. ரேஷன் அட்டை பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரத்து செய்யப்படாது. இது வெறும் வதந்தி தான். ரேஷன் கார்டில் குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட முகவரியில் இருந்தால் அந்த கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது. போலி ரேஷன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.