தமிழகத்தில் இனி காலி மனை பதிவின்போது அந்த இடத்திற்கான அண்மைக்கால புகைப்படத்தை இணைப்பது கட்டாயம் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கட்டடமாக இருந்து அதனை காலியிடம் என்று பதிவு செய்தால் சார் பதிவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக பத்திரப்பதிவின் போது களப்பணி மேற்கொள்வது குறித்த சுற்றறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் கட்டிடம் இருப்பது குறித்து ஆவணங்களில் குறிப்பிடாமல் காலி மனை இடங்களாக பதிவு செய்யும் நிலை தொடர்வதாக புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் காலி மனை என பதிவுக்கு வரும் ஆவணங்களில் அந்த இடத்தை எளிதில் அறியும் வண்ணம் அண்மைக்கால புகைப்படத்தை ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் எனவும் இதனை அனைத்து ஆவணத்தாளர்களும் அறியும் வகையில் அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் காலி மனை என்று குறிப்பிட்ட பதிவுக்கு வரும்போது முன்பதிவு ஆவணங்களில் கதவு எண், மின் இணைப்பு எண், குடிநீர் வரி மற்றும் சொத்து வரி எண் ஆகியவை குறிப்பிட்டு இருந்தால் கண்டிப்பாக களப்பணி மேற்கொள்ள வேண்டும். கட்டிடம் இருந்தும் அதனை களப்பணியில் பார்க்காமல் காலி இடமாக பதிவு செய்யும் சார் பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.