களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 1976 ஆம் வருடம் அமைக்கப்பட்ட முதல் புலிகள் காப்பகம். இதனை தொடர்ந்து ஆணைமலை, முதுமலை, சத்தியமங்கலம், மற்றும் மேகமலை புலிகள் காப்பகம் என நான்கு புலிகள் காப்பகங்கள் பின்னர் அறிவிக்கை செய்யப்பட்டது. களக்காடு புலிகள் காப்பகம் நதிகள் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் தென்மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் உள்ள ஆசிய யானைகள் உடைய மிக முக்கியமான வாழ்விடங்கள் மற்றும் நடைபாதைகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு யானைகளின் எண்ணிக்கையை பராமரிக்கும் நோக்கத்தோடு அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் செப்டம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்வர் மு க ஸ்டாலின் வந்த பொழுது களக்காடு பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய உயிர் பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிலையான சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு உள்ளூர் மக்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது