ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை..

ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2022 முதல் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி முதல் சாம்பியனாக்கினார். இதன் பிறகு, இருதரப்பு தொடருக்கான டி20 கேப்டனாக பிசிசிஐயால் நியமிக்கப்பட்டார். கேப்டனாக இதுவரை ஒரு தொடரை கூட இழந்ததில்லை. தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை பற்றி பேசுகையில், பாண்டியாவுக்கு மற்றொரு பெரிய பதவி உயர்வு கிடைத்தது.

அவர் ஒருநாள் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை  பிசிசிஐ நேற்றுஅறிவித்தது. அதில் டி20 இந்திய அணிக்கு கேப்டனாகவும், ஒருநாள் இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் (IND vs AUS) முதல் 2 போட்டிகளுக்கான அணியை வாரியம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. இதில் பாண்டியா இடம்பெறவில்லை. முன்னதாக, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் அவர் ஒதுக்கி வைக்கப்பட்டார்.

ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் அணியில் சேர்க்காததன் மூலம், அவருடன் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்ற தெளிவான செய்தியை பிசிசிஐ கொடுக்க முயற்சித்துள்ளது. ஒருவேளை அவர் இன்னும் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு முழுமையாக தகுதி பெறவில்லை என்றே கருதுகிறது. இலங்கைக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகள் குறித்து பேசுகையில், முதல் போட்டியில் 6 ஓவர்கள் வீசிய பாண்டியா, 2வது போட்டியில் 5 ஓவர்கள் வீசினார். அதாவது அவர் பெரும்பாலும் 6வது பந்துவீச்சாளராக இருப்பதால் ஒருநாள் போட்டிகளில் கூட 10 ஓவர்கள் முழுமையாக வீசுவதில்லை.

29 வயதான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நீண்ட காலமாக முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தார். அவர் அறுவை சிகிச்சை கூட செய்ய வேண்டியிருந்தது. இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. இது தவிர, ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் உள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னேறும் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து உள்ளது.

டைட்டில் போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், பாண்டியாவுக்கு இங்கு வாய்ப்பு கிடைக்கலாம். வேகப்பந்து வீச்சாளராக, இங்கிலாந்து ஆடுகளத்தில் அவர் அணிக்கு சாதகமாக இருப்பார். ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற பெரிய வீரர்களின் காயத்தால் இந்திய அணி தற்போது கலக்கத்தில் உள்ளது.

ஹர்திக் பாண்டியா கடைசியாக 2018 செப்டம்பரில் விளையாடினார். அதாவது, அவர் 5 ஆண்டுகளாக எந்த டெஸ்டிலும் விளையாடவில்லை. பாண்டியா 11 டெஸ்டில் 31 சராசரியில் 532 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம் மற்றும் 4 அரை சதங்கள் அடித்துள்ளார். 108 ரன்கள்தான் சிறந்த ஸ்கோர். அதே சமயம் பந்துவீச்சாளராக 31 சராசரியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த ஆட்டமாகும்.

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு நாள் மற்றும் டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி ஹைதராபாத் (ஜனவரி 18), ராய்ப்பூர் (ஜனவரி 21) மற்றும் இந்தூரில் (ஜனவரி 24) 3 ஒருநாள் போட்டிகளும், ராஞ்சி (ஜனவரி 27), லக்னோ (ஜனவரி 29) மற்றும் அகமதாபாத்தில் (பிப்ரவரி 1) 3 டி20 போட்டிகளும்  நடைபெறுகிறது.

அதேபோல இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 2 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நாக்பூரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 முதல் 21 ஆம் தேதி வரை டெல்லியிலும் நடைபெறுகிறது..

நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில், இஷான் கிஷன் (வி.கீ), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத் (வி.கீ), ஹர்திக் பாண்டியா (து.கே), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் , முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து டி20 போட்டிக்கான இந்திய அணி :

ஹர்திக் பாண்டியா (கே), சூர்யகுமார் யாதவ் (து.கே), இஷான் கிஷன் (வி.கீ), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (வி.கீ.), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் , சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கே), கே.எல் ராகுல் (து.கே ), ஷுப்மான் கில், சி புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எஸ் பாரத் (வி.கீ), இஷான் கிஷன் (வி.கீ), ஆர் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.