சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மிதவை படகு மற்றும் இயந்திர படகு சவாரிகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாகவே இங்கு கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் சுமார் 2000 சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் ஐந்து கோடி மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகம் 125 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த உணவகம் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே உணவை உண்ணக்கூடிய வகையில் தயார் செய்யப்படும் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மிதக்கும் கப்பல் உணவகத்தில் தமிழக உணவுகள் மட்டும் அல்லாமல் சர்வதேச அளவிலான உணவுகளும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.