பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான்  மாகாணத்தின் குவாடர்  துறைமுகத்தை சீனாவின் சின்ஜியாங்  மாகாணத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டம் தான் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழிதடத் திட்டம். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் சீனாவின் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான்  விடுதலை ராணுவ அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீன அரசாங்கத்தின் முதலீடு தங்கள் பிராந்தியத்தில் இருக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும் இதனால் உள்ளூர் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று கூறியும் அவ்வப்போது இந்த அமைப்பு தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் குவாடர்  துறைமுகத்தில் கட்டமைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சீன பொறியாளர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதற்கு பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்து இருவரை கொன்றுள்ளனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மக்கள் மற்றும் சீன பொறியாளர்கள் என யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன பொறியாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.