இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அவற்றில் தங்களது படைப்புகள் மற்றும் விளம்பரங்களை வெளியிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமூக ஊடக சந்தையானது 2025-ம் ஆண்டில் ரூ. 2,800 கோடி என்ற அளவில் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங்களில் நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், தவறான விளம்பரங்கள் பரவுவதை தடுப்பதற்காகவும் மத்திய அரசு சில புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.‌ அதன்படி சமூக ஊடகங்களில் உள்ள பிரபலங்கள், சமூக வலைதளங்களில் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்பவர்கள், கணினி வழியேயான கதாபாத்திரங்களை வெளியிடுவோர் ஆகியோருக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய நுகர்வோர் விவகாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டு  நெறிமுறைகளை மத்திய நுகர்வோர் விகார செயலாளர் ரோகித் சிங் வெளியிட்டார். இந்நிலையில் புதிய விதிமுறைகளை மீறும் விளம்பரதாரர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து குற்றங்கள் நடைபெறுவது உறுதியானால் ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் ஏதேனும் திட்டங்கள், சேவைகள் மற்றும் பொருட்களை ஊக்குவிக்கும் விதமான விளம்பரங்களை வெளியிடும் போது அதில் உள்ள சலுகைகள் மற்றும் பெற்ற விருதுகள் குறித்தும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர் நலன் சார்ந்த விவரங்களையும் வெளியிடுவது கட்டாயம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.