விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வரும் வியாழக்கிழமை பிரதோஷமும், அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு ஜனவரி 19 முதல் 22-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதிலும் 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலையேற அனுமதி கிடையாது.

மேலும் கோவிலுக்கு வருபவர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அதேபோல் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்பே பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓடைகளில் குளிக்க கூடாது. பக்தர்கள் இரவு நேரத்தில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை. அதே போல் அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர் வரத்து அதிகமாக இருந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என கூறியுள்ளனர். மேலும் போக்குவரத்து கழகம் சார்பாக தை அமாவாசையை முன்னிட்டு விருதுநகர், சிவகாசி, மதுரை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுதூர் போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.