மாநகர போக்குவரத்து கழகத்தின் குளிர்சாதன பஸ்களில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதிக்குமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநகர போக்குவரத்து கழகம் இயக்கும் குளிர்சாதன பேருந்துகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை முன்னாள் உறுப்பினர்கள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதிக்கும்படி நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது. இருப்பினும் நடத்துநர்கள் அனுமதிப்பதில்லை என்று இடையில் சில சர்ச்சைகள் எழுந்த சூழலில், இந்த உத்தரவு மீண்டுமாக வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் போன்றோர் தனியாகவோ, துனைவி, கணவர் (அ) ஓர் உதவியாளருடன் பேரவை செயலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரும்போது அவர்களை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்க ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்கவேண்டும்.

அதிலும் குறிப்பாக அண்ணாநகர், மத்திய பணிமனை, பெரும்பாக்கம் மற்றும் அடையாறு போன்ற பணிமனைகளின் கிளை மேலாளர்கள், மேற்கூறிய உறுப்பினர்கள் மாநகர போக்குவரத்துக் கழக குளிர்சாதன பேருந்துகளில் பயணம் செய்ய வரும்போது அவர்களை கட்டணம் இன்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும். மேலும் அவர்களிடம் மரியாதையோடு எவ்வித புகாரும் வராத வண்ணம் பணியாற்றுமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் சுற்றறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.