ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணி முதல் அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து சம்பத் நகர் கருங்கல்பாளையம் காந்தி சிலை பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தலின் போது வாக்குறுதியாக வழங்கிய திட்டங்களில் ஒன்றான மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விவசாயிகளுக்கு ஒன்றரை லட்சம் இலவசம் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே சிறப்பாக நாம் நடத்தி வெற்றி கொண்டுள்ளோம். நாங்கள் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக தவறான தகவல்களை தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்கள் அனைத்தும்  ஐந்தாண்டு நிறைவேற்றுவதற்காக கூறப்பட்டது. அதற்கு ஐந்தாண்டு தேவையில்லை இந்த ஆண்டுகளுக்குள்ளாகவே நிறைவேற்றி விடுவோம். தேர்தல் வாக்குறுதியில்  இடம் பெற்றுள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகையை நிதிநிலைமை சரியாக இருந்திருந்தால் உடனே வழங்கி இருப்போம். ஆனாலும் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கான உரிமைத் தொகை ஆயிரம் எப்போது வழங்கப்படும் என்பதை அறிவிக்க இருக்கிறோம்.

இந்த ஆட்சி முறையாக நடக்கிறதா? என்பதை எடை போடும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதனால் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் கடந்த தேர்தலில் ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு வெற்றி அமைய வேண்டும் என கூறியுள்ளார்.