தமிழகத்தில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த உரிமை தொகை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாம்களில் வழங்க வேண்டும். இதற்கான பணியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை சேர்ந்த 6000 தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக தமிழக மின் ஆளுமை முகமை இயக்ககம் கலைஞர் மகளிர் உரிமை ஸ்கீம் என்ற பெயரில் மொபைல் போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதில் தன்னார்வலர்கள் தங்களின் மொபைல் போன் எண்ணை உள்ளிட்டு கடவுச்சொல்லை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். பிறகு புதிய படிவம் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட படிவம் என இரு பிரிவுகள் இருக்கும். அதில் புதிய படிவத்தை தேர்வு செய்து விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இந்த மொபைல் போன் செயலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடையாது. மேலும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப நிலை குறித்தும் இதில் அறிந்து கொள்ள முடியும் எனவும் தன்னார்வலர்களுக்கு செயலியை பயன்படுத்துவது தொடர்பாக பயிற்சி வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.