ஜம்மு காஷ்மீரின் 10 மாவட்டங்களில் பனிச் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக யூனியன் பிரதேச பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரித்து உள்ளது. இதுபற்றி அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் “ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா, குப்வாரா உட்பட 10 மாவட்டங்களில் சென்ற 48 மணிநேரமாக கடுமையானது முதல் மிதமான பனிப் பொழிவு நீடித்து வருகிறது.

பந்திபோரா, குப்வாராவில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், அங்கு பனிச் சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது. பாரமுல்லா, கந்தா்பால், அனந்த்நாக், தோடா, கிஷ்த்வாா், குல்காம், பூஞ்ச், ராம்பன் போன்ற மாவட்டங்களில் சற்று குறைவான அபாயம் இருக்கிறது.

இந்த மாவட்டங்களில் பனிச் சரிவு ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு மக்கள் யாரும் போக வேண்டாம். மக்கள் அனைவரும் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ஜம்மு-காஷ்மீா் பேரிடா் மேலாண்மை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. கந்தா்பால் மாவட்டத்தின் சோன்மாா்க் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட பனிச் சரிவில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளா்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.