நாடு முழுவதும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் போரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களை சிறப்பிக்கும் வகையில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இன்றோடு கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 24 ஆண்டுகள் நிறைவடைந்தது. கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கார்கிலை கைப்பற்ற வந்தது. அதனை எதிர்த்து ஆபரேஷன் விஜய் என்று பெயரிடப்பட்ட  போரில் இந்திய ராணுவம் வெற்றி கண்டது.

கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் நுழைந்தது. மேலும் முக்கிய பகுதிகளை அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றனர். இந்நிலையில் மே 8-ஆம் தேதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த சியாச்சின் பகுதிகளை மீட்பதற்காக ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ராணுவம் களமிறங்கி தொடர்ந்து போராடியது.

இரு ராணுவத்தினருக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. இதனை தொடர்ந்து ஜூலை 26-ஆம் தேதி டைகர் மலை ரொலோலிங் மலை, பத்திரா டாப், ஸ்ரீ நகரில் லே தேசிய நெடுஞ்சாலை என அனைத்து பகுதிகளையும் மீட்டு இந்திய ராணுவம் ஜூலை இறுதியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் சரவணன் உட்பட மொத்தம் 527 ராணுவ வீரர்கள் போரில் தங்களது உயிரை நீத்தனர். மேலும் 1363 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் லடாக்கின் திராஸ் பகுதியில் இருக்கும் கார்கில் போர் நினைவகத்தில் முப்படைகளின் தளபதி உயிர் நீத்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்.

முப்படைகளின் தலைவர் அனில் சவுகான், இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார் மற்றும் விமானப்படை தலைமை தளபதி வி.ஆர் சவுத்ரி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சீத்தல் ரக 3 ஹெலிகாப்டர்கள் நினைவகம் மீது மலர்களை தூவிய படி பறந்து சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.