224 தொகுதிகளை உடைய கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி நிறைவடைந்த சூழலில், அதன் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடந்தது. அதன் முடிவில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக தேர்தலில் பாஜக தேல்வியடைந்துள்ளது. கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட மஜத வேட்பாளர் நாகராஜூவை 1,22,392 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, காங்கிரஸ் கட்சியின் பிரதேச கமிட்டி தலைவரான டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்று உள்ளார்.

இதேபோல் வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வி.சோமண்ணாவை 46,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா போன்றோரின் ஆதரவாளர்கள், கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி என இருவரின் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தினர். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் ஏற்படகூடிய சூழல் உருவாகியது.