கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1 முதல் 4ம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நகரப்புற பகுதிகளுக்கு டோக்கன் விண்ணப்பங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1 முதல் 4ம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நியாய விலை கடைக்கும் தனித்தனியாக விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். எந்தெந்த பகுதிகளுக்கு எந்தெந்த நாட்களில் விண்ணப்பம் டோக்கன் வழங்கப்பட உள்ளது என்பதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். முன்கூட்டியே திட்டமிட்டபடி விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பங்களில் குடும்ப அட்டை எண் தவறாமல் எழுதப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் விண்ணப்பம், டோக்கன் விநியோகம் தொடர்பான விவரங்களை ரேஷன் கடையில் தெளிவாக ஸ்டாண்டர்ட் போஸ்டரில் வெளியிட வேண்டும். டோக்கன்களில் முகாம் நடைபெறும் நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஒரு முகாமிற்கு ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்கள் வழங்கப்பட்டது என்ற விபரங்களை சேகரிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் வேண்டாம் என மறுப்பு தெரிவிப்பவர்கள் விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.  தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளர்களுக்கு இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.