சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் என்பவர் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனையாகும் நிலையில் சிறிது நேரத்தில் மொத்த டிக்கெட்டும் விற்பனையாகி விடுகிறது.

இந்த டிக்கெட்டுகளை வாங்கும் சிலர் அதை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்கிறார்கள். இதனால் சாதாரண ரசிகர்கள் போட்டியை காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விசாரணையின் போது கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விளையாட்டுப் போட்டி முடியும் நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே வழக்கை தொடர்ந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.