
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை அறிவித்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ரஹ்மானின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த பிறகு, அவர் நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். ரஹ்மான் மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.
ரஹ்மானின் உடல்நிலை குறைபாடு குறித்து அவரது மனைவி சாய்ரா பானு ஒரு அறிக்கை மற்றும் ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், “ரஹ்மான் விரைவில் குணமடைய வேண்டும். நாங்கள் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை, உடல்நிலை காரணமாக சில வருடங்களாக தனியாக வசிக்கிறோம். எனவே, ஊடகவியலாளர்கள் என்னை அவரது முன்னாள் மனைவி என்று குறிப்பிட வேண்டாம்” என கேட்டுக்கொண்டார். ரஹ்மானின் கடினமான நேரங்களில் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு மன அழுத்தம் தரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ரஹ்மான் மற்றும் சாய்ரா 1995-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கதிஜா, ரஹீமா மற்றும் அமீன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த நவம்பர் 19, 2024, இருவரும் தங்களின் திருமண உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அறிவித்தனர். ஆனால், ரஹ்மானின் மருத்துவப் பிரச்சனைகளின் போது, சாய்ரா அவரது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.