இலங்கையில் கடந்த 2019 -ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தற்கொலை படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனா மீதும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே  மீதும் இந்த தாக்குதலை தடுக்க தவற விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 12-ம் தேதி இலங்கை சுப்ரீம் கோர்ட் இது தொடர்பான வழக்கில் குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக சிறிசேனா இலங்கை மதிப்பில் ரூ.10 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இல்லையென்றால் அவர்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. சிறிசேனா தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து பாதுகாப்புதுறையின் கவனக்குறைவு தான் குண்டு தாக்குதலுக்கு காரணம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொழும்பில் நேற்று தனது சுதந்திரா  கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியஅவர்  கூறியதாவது, மற்றவர்கள் செய்த ஒன்றுகாக நான் நாட்டில் கிறிஸ்தவ சமூகத்தினரிடம்  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இலங்கை அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேனா அடுத்த வருடம் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.