ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அமமுக போன்ற கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதன்படி இபிஎஸ் தரப்பில் கே.எஸ் தென்னரசு வேட்பாளராகவும், ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் பிறகு ஓபிஎஸ் தரப்பு பாஜக போட்டியிட்டால் தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொள்வோம் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்காவிட்டாலும் தனி சின்னத்தில் எங்கள் வேட்பாளர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றுமையின்மை இல்லாமல் போனதற்கு யார் காரணம் என்பது அனைத்து மக்களுக்கும் கழகத்தின் தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும் என்றும் கூறினார். மேலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் தனி சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தி போட்டியிடுவோம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.