ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்த 83 வேட்பாளர்களில் 6 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில் 77 பேர் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அதற்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இதில் மிக முக்கியமாக அதிமுக கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள கட்சியின் வேட்பாளரான கே எஸ் தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்படுவதாக தற்போது தேர்தல் நடத்தும் அலுவலரான சிவகுமார் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தை கே.எஸ் தென்னரசு பெறுவாரா என கடந்த ஒரு வாரமாக பிரச்சனையாக இருந்து வந்தது. அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணி என 2 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு யாருக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்படுவது என்ற விவகாரம் உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் சென்று உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தொடர்ந்து அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களால் தென்னரசு தேர்ந்தெடுக்கப்பட்டார்..

எனவே ஓபிஎஸ் அணி தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றது. எனவே இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு களம் காண இயக்குகிறார். அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த தேர்தலில்  திமுக கூட்டணியில் காங்கிரசின் இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக கூறிய மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச்லைட் சின்னமும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

அதேபோல தேமுதிக வேட்பாளரான ஆனந்த் அவர்களுக்கு முரசு சின்னம் வழங்கப்படுகிறது. இந்த தேர்தலில் அமமுக கட்சி சார்பில் 2 வேட்பாளர்கள்  நிறுத்தப்பட்டிருந்தனர். ஏனெனில் ஒரு வேட்பாளர் ஏற்கப்படவில்லை என ஏதேனும் பிரச்சனை வந்தால் இரண்டாவது வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்படாத  காரணத்தால் இருவரும் இந்த வேட்புமனுவை திரும்ப பெற்ற நிலையில், குக்கர் சின்னமும் சுயேட்சைக்கு வழங்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதான கட்சிகளான காங்கிரஸ் சார்பில் இளங்கோவனுக்கு கை சின்னமும் அதிமுக சார்பில் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக சார்பில் இருக்க கூடிய ஆனந்துக்கு முரசு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சுயேச்சை வேட்பாளர்களாக நிற்பவர்களுக்கு அவர்கள் கேட்கப்பட்டுள்ள சின்னங்களின் பட்டியலில் இருந்து அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த சின்னங்கள் ஒவ்வொன்றாக ஒதுக்கப்படுகின்றன. ஒரே சின்னத்தை 2 பேர் கேட்டிருந்தால் குலுக்கல் முறையில் தான் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்..