ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று  மாலை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் தொடர்பாக எந்த ஒரு பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலத்தை யாரும் ஒருங்கிணைக்கவும் நடக்கவும் கூடாது . யாதொரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்ற சாதனங்கள் மூலமாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்க கூடாது. பொதுமக்களை ஈர்க்கும் விதமாக எந்த ஒரு இசை நிகழ்ச்சி உள்ளிட்ட எதையும் நடத்தக்கூடாது.

தொகுதி வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி பணியாளர்கள் என அனைவரும் இன்று  மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணி முதல் செயல் திறன் அற்றது ஆகிவிடும்.

வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்கும் வாக்குச்சாவடியில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரின் முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு எந்த ஒரு வேட்பாளரும் அனுமதிக்க கூடாது. இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அனுமதிக்கப்படலாம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.