வங்காள தேசத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி அன்வருல் அசிம். இவர் கடந்த 12ஆம் தேதி வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்தார். அதன்படி இவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதற்காக தன்னுடைய நண்பர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அன்வருல் அசிம் கடந்த 14ஆம் தேதி வீட்டில் திடீரென மாயமானார். இது தொடர்பாக வங்கதேசம் தூதரகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தது.

அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன எம்பியை தேடி வந்த நிலையில் தற்போது அவர் கொல்கத்தாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடைய உடல் சஞ்சீவா கார்டனின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் இது திட்டமிட்ட கொலை என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. அதோடு இந்த கொலை வழக்கில் 3 பேரை வங்கதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் இந்திய அரசாங்கம் வங்கதேசத்திற்கு உதவுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.