உலக சாதனை படைத்த கமி ரித்தா ஷெர்பா – எவரெஸ்ட்டின் உச்சியை 30-ஆவது முறையாக தொட்டுள்ளார்.

நேபாளத்தைச் சேர்ந்த கமி ரித்தா ஷெர்பா என்ற மலையேறுபவர், உலகின் உயரமான மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தை 30-ஆவது முறையாக கைப்பற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
நேபாள சுற்றுலா துறை அதிகாரிகள் தகவல் படி, நேற்று காலை 7:49 மணிக்கு கமி ரித்தா ஷெர்பா தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார். இது அவரது 30-ஆவது எவரெஸ்ட் சிகரம் ஏற்றம் ஆகும்.

இது இந்த பருவகாலத்தில் அவரது இரண்டாவது ஏற்றம் ஆகும். முன்னதாக மே 12-ஆம் தேதி அவர் முதல் முறையாக இந்த பருவகாலத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
நேபாளின் (Solukhumbu) மாவட்டத்தில் உள்ள தாமே கிராமத்தைச் சேர்ந்த கமி ரித்தா ஷெர்பா, (Seven Summit Treks) நிறுவனத்தில் மூத்த வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார். 54 வயதான  ஷெர்பா மலையேறுபவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக மலை ஏறி வருகிறார்.

1992-ஆம் ஆண்டில் ஆதரவு பணியாளராக எவரெஸ்ட் பயணத்தில் ஈடுபட்டதே அவரது மலையேற்ற பயணத்தின் தொடக்கம். கமி ரித்தா பல பயணங்களை மேற்கொண்டு, எவரெஸ்டின் உச்சியை பல முறை தொட்டுள்ளார். அவரது சாதனைகள் எவரெஸ்ட்க்கு அப்பாற்பட்டு நீண்டுள்ளன. ஏனெனில் K2, சோ ஓயு (Cho Oyu), லோட்சே (Lhotse) மற்றும் (Manaslu) போன்ற பிற கடினமான சிகரங்களையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று, உலகின் உயரமான சிகரத்தின் உச்சிக்கு ஒரு குழு மலையேறுபவர்களையும் கமி ரித்தா வழிநடத்திச் சென்றார். சுமார் 28 மலையேறுபவர்களைக் கொண்ட மலையேற்றக் குழுவினருடன் காட்மாண்ட்டுவிலிருந்து கமி ரித்தா பயணத்தைத் தொடங்கினார். 71 ஆண்டுகால வரலாற்றில், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிக முறை ஏறி சாதனை படைத்தவர்  கமி ரித்தா ஷெர்பா. கடந்த ஆண்டு, சொலுகும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பசாங் தவா ஷெர்பா 27-ஆவது முறையாக எவரெஸ்ட்டை கைப்பற்றினார். ஆனால், இந்த பருவகாலத்தில் அவர் ஓய்வெடுத்து வருகிறார்.