நிலவுப்பயண வரலாற்றில் இடம் பிடித்த தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலிருந்து  இருந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ரயில்வே ஊழியர் பழனிவேல் மகன். தொழிற்கல்வி முடித்துவிட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும், சென்னை ஐஐடி தொழிற்கல்வி பொறியியல்,முதுநிலை ஆராய்ச்சி என அடுத்தடுத்து படித்து வந்தார். 1989 ஆம் வருடம் இவருக்கு இஸ்ரோவில் விஞ்ஞானியாகவும் வாய்ப்பு கிடைத்தது. டிப்ளமோ படிப்பில் இருந்து கற்றதால் நுணுக்கமான சில வன்பொருள் வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும் இயல்பு இவருக்கு ஆரம்பத்திலிருந்து இருந்துள்ளது.

இஸ்ரோவில் கடந்த 30 வருடங்களாக பல்வேறு பொறுப்புகளிலும் திட்டங்களிலும் பணியாற்றி வந்துள்ளார் வீர முத்துவேல். 2019 ஆம் வருடம் சந்திராயன் துணை திட்டத்தின் இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டார். நான்கு வருடத்திற்கும் மேலாக பல்வேறு வகையான ஆய்வுகள் பரிசோதனைக்கு பிறகு சந்திராயன் விண்கலம் முழு வடிவத்தை அடைந்துள்ளது. தொழில்நுட்பம், மென்பொருள், வன்பொருள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முழு ஈடுபாடு கொண்ட வீரமுத்துவேல் கடந்த இரண்டு வருட காலத்தை ஆய்வகத்திலேயே பொழுதை கழித்து வந்துள்ளார். சந்திராயன் 1, சந்திராயன் இரண்டு திட்டங்களிலும் பல தமிழர்கள் திட்ட இயக்குனராக இருந்துள்ள நிலையில் இதன் தொடர்ச்சியாக தான் சந்திராயன் 3 திட்டத்திலும் இந்தியாவின் நிலவு பயண வரலாற்றில் வீரமுத்துவேல் இடம் பிடித்துள்ளார்.