தமிழகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் இசை கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் இசை மற்றும் நாட்டிய பிரிவுகளில் 3 ஆண்டு பட்டய படிப்புகள் மற்றும் பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் குரல் இசை, வயலின் மற்றும் பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்புகள் உள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் நாதஸ்வரம் மற்றும் தவில் பிரிவுகளில் பட்டப்படிப்பு தொடங்கிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம் எனவும் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 04362-261600 என்ற எண்ணை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.