தமிழக அரசியல் களத்தில் தற்போது எம்எல்ஏ-க்களின் அதிரடி ராஜினாமாவும், கட்சித் தாவல்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து வரும் நிலையில், தற்போது கரூர் தொகுதி எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது 6-ஆவது எம்எல்ஏ-வாக எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பதவி விலகியிருப்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் விரைவில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் இந்த தொடர் சரிவு மற்றும் ஆளும்கட்சியின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு எக்ஸ்ட்ரீம் (Extreme) ஆகியுள்ளது என்பதையே இந்த ஆறாவது எம்எல்ஏ-வின் ராஜினாமா காட்டுகிறது” என்று சாடியுள்ளார்.
மேலும், “ஏற்கனவே ஆட்சியை அமைப்பதற்காகத் தங்களுக்கு ஆதரவு அளித்த கட்சிகளின் மீது துளியும் நம்பிக்கையின்றி, தொடர்ந்து நிறுத்தாமல் எம்எல்ஏ-க்கள் பர்ச்சேஸை (Purchase) ஆளும்கட்சி தொடர்ந்து வருவது, இந்த மாநில மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்” என்று உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார். ஆளும்கட்சியின் இந்த குதிரை பேர அரசியலுக்கு வரும் காலங்களில் தமிழக மக்களே தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
