அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், வானவியல் மற்றும் உட்பட பல்வேறு மன்ற  செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி -வினா மன்றம், சிறார்  திரைப்படம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் வருகிற பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் மாவட்ட, பள்ளி, வட்டாரம் அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டிகள் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் மாநில போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. அதனால் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் பங்கேற்கும் விதமாக எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து போட்டிகளும் ஒரு சில குறிப்பிட்ட மாணவர்களை வெற்றி பெறும் விதமாக அல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு மாணவர்கள் வெற்றி பெறும் விதமாக அனைத்து மாணவர்களும் பங்கேற்று வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.