கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் மெட்ரோ ரயில்களின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து ஹெச்பி ஆர்பி லேஅவுட் வரை தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சாலையில் உள்ள நகவாரா என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தூண்  இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது. இந்த தூண் அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு குடும்பத்தின் மீது விழுந்ததில் தேஜஸ்வி என்ற பெண் மற்றும் அவருடைய கணவர், 2 1/2 வயது மகன் ஆகியோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தேஜஸ்வி மற்றும் அவருடைய மகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதன் பிறகு தேஜஸ்வியின் கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முதல்வர் பசுவராஜ் பொம்மை வருத்தம் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதே போன்று பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.